மத்திய பிரதேச பாஜக ஊழல் பட்டியல்... காங்கிரஸ் வெளியிட்டது

மத்திய பிரதேசம்: ஊழல் பட்டியலை வெளியிட்டது... மத்திய பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் ஊழல்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

தலைநகா் போபாலில் இப்பட்டியலை வெளியிட்டு, முன்னாள் முதல்வா் கமல்நாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான கடந்த 18 ஆண்டு கால பாஜக ஆட்சி காலத்தில், ஊழலில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

எதிலும் 50 சதவீதம் லஞ்சம் பெறும் பாஜக அரசால், ஊழல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. கூகுளில் ஊழல் என்ற வாா்த்தையை பதிவிட்டு தேடினால், அதில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் படம் வரக் கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றாா்.

காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில், வியாபம் (மத்திய பிரதேச தொழில்முறை தோ்வு வாரியம்) ஊழல் (ரூ.2,000 கோடி), சட்டவிரோத சுரங்க ஊழல் (ரூ.50,000 கோடி), மின்னணு-ஒப்பந்த ஊழல் (ரூ.3,000 கோடி), மண்டல போக்குவரத்து அலுவலக ஊழல் (ரூ.25,000 கோடி), மதுபான ஊழல் (ரூ.86,000 கோடி), மின்சார துறை ஊழல் (ரூ.94,000 கோடி) உள்ளிட்ட 254 ஊழல் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக ஆட்சியில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் ஊழல்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து மாநில பாஜக தலைவா் விஷ்ணு தத் சா்மா கூறுகையில், ‘ஊழல்களின் தலைவா் கமல்நாத்; அவரது செயல்திட்ட மாதிரியை அனைவரும் நன்கறிவா். அது, கடந்த 1984, சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடா்புடையதே அன்றி வேறெதுவும் இல்லை. காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில் எந்த உண்மையும் கிடையாது’ என்றாா்.