விஏஓ மீதான தண்டனையை உறுதி செய்தது சென்னை கோர்ட்

சென்னை: கச்சிராப்பாளையம் விஏஓ மீதான லஞ்ச குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை கோர்ட் உறுதி செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பெரியசாமி பணியாற்றி வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவி பெயரில் தாட்கோ மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் பெற ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். இந்த சான்றிதழ்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி ரூ.300 லஞ்சம் கேட்டார்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் கலந்த ரூ.300 நோட்டுகளை கொடுத்தனர்.இதை லஞ்சமாக வாங்கும் போது, பெரியசாமியை, 2007 ஜூலை, 17ல் கையும் களவுமாக கைது செய்தனர். விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கை விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. எனவே, பெரியசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து 2016ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- பெரியசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், பெரியசாமியின் மகனுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வர முடியவில்லை என்று கூறி பெரியசாமியின் சட்டை பாக்கெட்டில் புகார்தாரர் குமார் ரூ.300-யை வைத்துள்ளார். மொய் பணம் என்று இவரும் அமைதியாக இருந்து விட்டார்” என்று வாதிட்டார்.

ஆனால், இந்த வாதத்தை ஏற்க முடியாது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில், வெற்று வருமானச் சான்றிதழை பெரியசாமி கொடுத்து, அதை நிரப்பிக் கொள்ளும்படி குமாரிடம் கூறியுள்ளார். எனவே, லஞ்ச குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதிச்செய்கிறேன். எனவே, சிறை தண்டனையை அனுபவிக்க பெரியசாமியை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.