ஓமன் நாட்டில் தவிக்கும் தங்கள் மகனை மீட்டு தர கோரி தந்தை மனு

திருவள்ளூர்: மகனை மீட்டு தர தந்தை கோரிக்கை... ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற தங்கள் மகனை கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரை மீட்டு தருமாறும் கலெக்டரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.

ஆவடி அடுத்த பட்டாபிராம் கருணாகரச்சேரி சர்ச் தெருவை சேர்ந்தவர் வில்லியம் லூயிஸ். கார்பெண்டர் ஆக வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் தினகரன் விஜய் (28) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி மூலமாக ரூ.1 லட்சம் பணம் செலுத்தி ஓமன் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கார் வாஷ் செய்யும் பணியில் இருந்து வருகிறார்.

அங்கு 3 மாதங்களாக வேலை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு வேலை மற்றும் உணவு எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் தான் உன்னை அனுப்புவோம் என்றும் அங்கு இருப்பவர்கள் கூறுவதாகவும் ஓமன் நாட்டில் இருந்து தினகரன் விஜய் வாட்ஸ்ஆப் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து வில்லியம் லூயிஸ் ஏஜென்சியிடம் சென்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த வில்லியம் லூயிஸ் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது மகனை மீட்டுத்தரக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மனு கொடுத்தார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.