நீட் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவிப்பு

சென்னை: ஆளுநர் ரவிக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ...சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதையடுத்து இதில், நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அனுமதி தரமாட்டேன், மாணவர்களை அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்பன உள்ளிட்ட கருத்துகளை ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.

எனவே இதற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: ஜனநாயக முறைகளை நிராகரித்து செயல்படும் ஆளுநரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ் பெற்ற மருத்துவர்களான மோகன் காமேஸ்வரன், பழனிச்சாமி, முகமதுரீலா, பாலாஜி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத் திறனாளிகளா? ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் பயிற்சி மையங்களுக்கு துணைபோவதாக ஆளுநரின் கருத்து இருக்கிறது. ஆளுநர்மீது கண்டனம் தீர்மானம் கொண்டுவர முதல்வர் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். என அவர் கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்துக்கு மாறாக ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார். ஆள்மாறாட்டம், வினாத்தாள் குளறுபடி இல்லாமல் நீட் தேர்வு நடந்துள்ளதா? ஆளுநராக இருந்து கொண்டு கருத்து சொல்லும் உரிமை ஆளுநர் ரவிக்கு இல்லை.என அவர் கூறினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. 3 ஆண்டுகள் ஆன நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை. நீட்தேர்வை ரத்து செய்ய முடியாதுஎன தெரிந்தே மக்களை ஏமாற்றியமைக்காக அவர்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.என அவர் கூறினார்.