ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்படும்... சீன தூதர் உறுதி

இலங்கை: இலங்கைக்கு விரைவில் ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதர் கி ஷென்கோங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.


சமீப ஆண்டுகளில் இலங்கைக்கு பெருமளவிலான மருத்துவ உதவியை வழங்கும் நாடாக சீனா விளங்குகிறது. கொரோனா காலத்தில் இலங்கைக்கு அதிகளவில் தடுப்பூசிகள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சோதனை உபகரணங்களை சீனா வழங்கியது. அது பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இலங்கை வெல்ல உதவியது என சீன தூதர் கூறினார்.

சீனா அதன் 50 கோடி யுவான் அவசரகால மனிதாபிமான உதவி திட்டத்தின்கீழ் ரூ.120 கோடி மதிப்பிலான மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அளித்துள்ளது.


வருகிற மாதங்களில் வழங்கப்படவுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கும், நோயாளிகளுக்கும் வினியோகிக்கப்படும். இவ்வாறு சீன தூதர் கி ஷென்கோங் தெரிவித்துள்ளார்.