கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரசை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் முடிவு எப்போது வரும் என்று தெரியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற பாதிப்புகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மோசமான நிலையில் உள்ளன.

கொரோனா காரணமாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றன. உயிரிழப்பு ஏற்பட்டாலும், கொரோனாவால் ஏற்படும் சங்கிலித்தொடர் பாதிப்பும், வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும் மனித மனங்களை சிதைத்து வருகின்றன. ஆழ்ந்த கவலையில் தங்களை ஆட்படுத்திக்கொள்ளும் மக்கள் சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு செல்வது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவுவது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்து மக்களிடையே பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் மனநலத்திலும், தற்கொலை தடுப்பிலும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் இதுகுறித்து கூறுகையில், யாருடனும் சேர்ந்திருக்காமல் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், கொரோனா வைரஸ் நிலைமைகளை சமாளிப்பதும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த கடினமான தருணத்தில், ஒரு விரிவான, ஒருங்கிணைந்த, பதில் அளிக்கக்கூடிய மன நலம் மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் நாம் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.