மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மேலும் சிற்றுந்துகளை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிடல்

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் தற்போது தினசரி 2.50 முதல் 2.80 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இணைப்பு வாகன வசதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்து சேவை அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை அடுத்து இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோக்கள், பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, 22 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கு அடுத்த கட்டமாக, மேலும் 20 சிற்றுந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான, வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து இந்த பட்டியல் சென்னைமாநகர போக்குவரத்துக் கழகஅதிகாரிகளிடம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். தொடர்ந்து, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், மெட்ரோரயில் நிலையங்களிலிருந்து கூடுதல் சிற்றுந்துகள் இயக்கப்படும் என அவர்கள் கூறினர்.