குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக வெளியான தகவல் தவறானது; அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக நிருபர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தபோது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அம்மா நகரும் நியாய விலைக் கடையை செயல்படுத்தி, ஒரு சாமானிய முதல்-அமைச்சராக திகழந்து வருகிறார். தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

கலசபாக்கம் பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் 85 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகாமையில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது முதல்- அமைச்சரின் மாபெரும் சாதனை. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர்தான் அறிவிப்பார் என்று கூறினார்.