அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை உயர்வு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தார். அதை தொடர்ந்து இன்று 2 வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சேலம் , நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் [பற்றிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்தி, மதிவேந்தன் போன்றோர் பங்கேற்றுள்ளனர். அதேபோன்று நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றுவுள்ளனர்.

இதையடுத்து இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திடீரென அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், குழந்தைகளிடம் தங்களுடைய குறைகள் பற்றி கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது தான். தற்போது குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீக்கிரம் வருகை புரிகின்றனர். நன்கு படிக்கின்றனர் என அவர் கூறினார்.