அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு அதிகமாகிவிட்டது... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம்

மதுரை: தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்கொழுப்பு அதிகமாகி விட்டது. அமைச்சர்கள், மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை பரவையில் R.J.தமிழ்மணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதே? என்ற கேள்விக்கு.
தமிழக முதல்வர் தற்போதைய நிலை குறித்து கவனமாக கையாள வேண்டும். தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

விழா காலங்களில் அரசு பேருந்துகள் , ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு அனைத்து தரப்பினருடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும். ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்கொழுப்பு அதிகமாகி விட்டது. அமைச்சர்கள், மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.


அமைச்சர்கள் செல்லும் கார் ஓசி, பணியாட்கள் ஓசி, வீடு ஓசி, என அனைத்தும் ஓசி, மக்கள் வரி பணத்தில் தான் அமைச்சர்களுக்கு எல்லாம் ஓசி.ஆனால் ஒரு அமைச்சர், பெண்களை பார்த்து ஓசி பயணம் என.வாய் கொழுப்பாக பேசுகிறார்.எனவே தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என கூறாமல், விலையில்லா மடிகணினி, சைக்கிள் என பெயரிட்டு அழைத்தார்.


எனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று உள்ளதை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும்.மதுரை மாநாகராட்சி மேயரை முதலில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக நடைபெற வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.