நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை... அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது வருகிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 109.40 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 805 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனுடன் இணைந்த 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.24 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.60 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. 52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 37 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டத்தில் 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கடனா அணை நீர்மட்டம் 72.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 62.07 அடியாகவும் உள்ளது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் 108.50 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் பாசனத்துக்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.