ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் தான் அதிக கவனம் வேண்டும்

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் வாழும் 780 கோடி மக்களும் கதிகலங்கியுள்ளனர். மேலும் உலகின் மொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 5 மாதங்கள் கடந்த நிலையிலும் கூட பொதுமக்களுக்கு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. வேலை இல்லை, போதிய வருமானம் இல்லை, கடன் தவணை கட்ட முடியவில்லை, குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று பல கஷ்டங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவில், இடையிடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் எதிர்பார்த்த தளர்வு 160 நாட்களுக்கு பிறகே இப்போது கிடைத்திருக்கிறது. இன்று முதல் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதுடன், மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அரசின் அடுக்கடுக்கான தளர்வு அறிவிப்புகளை பார்த்தவுடன் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று மக்கள் நினைத்துவிட கூடாது. உலக வரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா, 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்கு தள்ளும் உத்வேகத்தில் உள்ளது.

கட்டுப்பாடுகளால் கலங்கிப்போன மக்கள் இனியும் தாங்கமாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே தற்போது தளர்வுகள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. இனிமேல் தான் மக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். வேலைக்காக வெளியே செல்லும்போது, மறக்காமல் முககவசம் அணிய வேண்டும். யாரிடம் பேசினாலும் சற்று இடைவெளியை கடைப்பிடித்து பேசவும். யாரும் முககவசம் அணியாமல் இருந்தால், அவர்களையும் கட்டாயப்படுத்தி அணியச்சொல்லவும்.

தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்கவும். பணிக்கு சென்று வீடு திரும்புபவர்கள், நன்றாக குளித்த பிறகே ஏனைய பணிகளை கவனிக்கவும். உடுத்திய ஆடைகளையும் உடனடியாக துவைத்துவிடவும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நாமும் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதுடன், வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்போதைய தேவை அதிக கவனத்துடன் செயல்படுவதுதான்.