கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்துள்ளது - உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த உலகின் கவனமும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையை நோக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுபடுத்தி உள்ளோம். உலக சுகாதார அமைப்பும் இதுகுறித்து பேசி உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூட பாராட்டி உள்ளது என்று கூறினார்.

எல்லா அரசு துறைகளும் கொரோனா பாதிப்பை குறைப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்துவிட கூடாது. நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துவிடும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்து உள்ளது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பாராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் தங்களது உடல்நலனை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் எனவும், கொரோனா மட்டுமின்றி மழைக்கால நோய்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.