எனது சகோதரர் டொனால்ட் டிரம்ப் கொடூரமானவர், ஒழுக்கமற்றவர் - டிரம்பின் சகோதரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் ஆவார். இந்நிலையில் இவர் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவர், 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் மேரி ஆன் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில், டொனால்டு டிரம்பின் சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கைகள், அவர்களது குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் மேரி ஆன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை என மேரி ஆன் கோபமாக கூறியுள்ளார். இந்நிலையில் உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். ஆனால் அது பொய்களின் புத்தகம் என ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு அவரதுசகோதரியிடமிருந்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஜனாதிபதி டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ இந்த பதிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.