தேசிய இளைஞர் விழா- மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்

தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் தனிநபர், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 24-வது தேசிய இளைஞர் விழாவிற்கான தேசிய அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையிலும், மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.

இதை முன்னிட்டு மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வருகிற 29-ம் தேதியும், 30-ம் தேதியும் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், குழுக்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாநில அளவில் வெற்றி பெறுவோர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க வருகிற 31-ம் தேதி அன்று 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பாரம்பரிய இசை கருவிகள், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள், இந்திய இசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய உடை அலங்காரம், நவீன உடை அலங்காரம், வீதி நாடகம், சமூக செய்தி, ஓவியம், சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை, கவிதை எழுதுதல், யோகா என மொத்தம் 18 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 11 தனிநபர் போட்டிகளும், 7 வகையான குழு போட்டிகளும் நடைபெறும்.

முதல்நிலை போட்டியான மாவட்ட அளவிலான போட்டிகள் மெய் நிகர் முறையில் மட்டுமே நடத்தப்படும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் தங்களுடைய போட்டிக்கான வீடியோ பதிவை நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உறுதிமொழி படிவத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகம், நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். மேலும் போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.