கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் தனிமையை போக்க புதிய ஏற்பாடு

கொரோனா நோயாளிகள் தனிமையினால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்களின் மனநிலையை மாற்ற பல்வேறு வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகளுக்கு தனிமை உணர்வை மறக்கடிக்கும் விதமாக புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 400 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை முகாமில் நோயாளிகளுக்கு இடைவெளி விட்டு மின்விசிறிகள் வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு தனிமையை மறக்கடிக்கவும், நேரத்தைக் கழிக்க ஏதுவாக பெரிய அளவிலான டிவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த டிவியில் தொடர்ச்சியாக புதிய படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

செல்போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக செல்போன் சார்ஜ் செய்யவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் சத்தான உணவு வகைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றது. அரசு மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் கூட தனியார் மருத்துவமனை போல காட்சி அளிக்கும் கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.