நியூசிலாந்தின் அடுத்த பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் என தகவல்

நியூசிலாந்து: ஜெசிந்தாவின் மந்திரி சபையில் காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவைத்துறையின் மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் (44) அடுத்த பிரதமராவார் என்று தெரிய வந்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் (42) பதவி வகித்து வருகிறார். தனது 37வது வயதில் பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஜெசிந்தா, கொரோனா வைரஸ் தாக்குதல் போன்ற நெருக்கடியின் போது நாட்டை சிறப்பாக வழிநடத்தி சர்வதேச கவனத்தைப் பெற்றார்.

இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தா கடந்த 19ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பதவி விலகுவதாக அறிவித்தார். நியூசிலாந்தில் வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த மாதம் (பிப்ரவரி) பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

ஜெசிந்தாவின் இந்த அறிவிப்பு அந்நாட்டு அரசியல் களத்தை உலுக்கிய நியூசிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நியூசிலாந்தை பொறுத்தமட்டில், ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுகிறார்.

தலைவர் பதவிக்கான போட்டியில் ஜெசிந்தாவின் மந்திரி சபையில் காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவைத்துறையின் மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் (வயது 44) மட்டுமே களம் இறங்கி உள்ளார். இதனால் அவர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அவர் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படி அவர் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற்று, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், ஜெசிந்தா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஜெனரலிடம் முறைப்படி வழங்குவார். அதன் பின்னர் கவர்னர் ஜெனரல், கிறிஸ் ஹிப்கின்சை புதிய பிரதமராக நியமிப்பார்.

அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹிப்கின்ஸ் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்பது நிச்சயமற்றது. அக்டோபர் தேர்தலில் தொழிற்கட்சி தோற்கடிக்கப்பட்டால், ஹிப்கின்ஸ் எட்டு மாதங்கள் மட்டுமே பிரதமராக இருப்பார். மறுபுறம், ஹிப்கின்ஸ் 2020 முதல் 2022 வரை 2 ஆண்டுகள் கொரோனா தடுப்பு சிறப்பு அமைச்சராக பணியாற்றி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றதால், அவரது தலைமையில் லேபர் கட்சி எளிதில் வெற்றி பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.