பீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 74 தொகுதிகளைக் கைப்பற்றி ஆளும் கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.

இந்நிலையில், அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி முடிவெடுப்பதற்காக நிதிஷ்குமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவையின் தனது அனைத்து சகாக்களுக்கும் முதல் மந்திரி நன்றி தெரிவித்து கொண்டார். இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடிந்தது.

அப்போது பேசிய அவர், வரும் 15-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைய உள்ள சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது.

இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர் பீகாரில் புதிய அரசு அமைவதற்காக நிதிஷ்குமார் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை கவர்னர் பகு சவுகான் ஏற்றுக் கொண்டார்.இருப்பினும், புதிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வரை முதல் மந்திரியாக நீடிக்கும்படி நிதிஷ்குமாரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.