எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கவில்லை; அமைச்சர் பிரசன்ன ரணவீர தகவல்

இறுதி முடிவு எடுக்கவில்லை.... மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, உடுநுவர பிரதேசத்திலுள்ள பித்தளை உற்பத்தியாளர்களைச் சந்திப்பதற்காக துறைசார் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அப்பகுதிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தற்போது எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வோம் என்பதை கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்தோம்.

நிச்சயமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றோம்.

எனினும், 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து நாங்கள் உத்தியோகபூர்வமாக எந்தமுடிவும் எடுக்கவில்லை. சிலர் தங்களது சொந்த நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் 20ஆவது திருத்தச் சட்டம் வரும்போது 13ஆவது திருத்தத்திற்கு நடக்கப்போவதை தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.