அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை; மருத்துவமனை அறிக்கை

முதல்வரின் தாயாரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா பாதிப்பை சரி செய்யும் சிகிச்சை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. இதய பாதிப்பும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.