எவ்வளவு கனமழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்கப்படாது...அமைச்சர் உறுதி

சென்னை: வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரையில், எவ்வளவு கனமழை பெய்தாலும் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மின் விநியோகம் சீராக இருக்க உத்தேசித்துள்ள பணிகள், முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க இன்று ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த ஆண்டு பருவமழை. மின்மாற்றிகளைப் பொறுத்தவரை, இந்த வடகிழக்கு பருவமழைக்கு 14,442 கைவசம் உள்ளது. மின்கம்பங்களை பொருத்தவரை 1 லட்சத்து 50932 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 12780 கி.மீ தொலைவுக்கு மின்கம்பிகள் தயார் நிலையில் உள்ளன.

எனவே, இந்த மழைக்காலங்களை எதிர்கொள்ள தேவையான பொருட்கள் கிடைப்பது குறித்தும், அந்தந்த மண்டலங்கள் மற்றும் வட்டங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்தும் ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, சிறப்பு பராமரிப்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15.6.2022 முதல் 8.10.2022 வரை 13 லட்சத்து 65 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த சுமார் 39616 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. சாய்ந்திருந்த 31197 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

25080 புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1759 கி.மீ., பழைய மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை 2692 தூண் பெட்டிகள் தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

அரை மீட்டர் நீர்மட்டம் இருந்தாலும் சரி செய்ய மின்சாரம் நிறுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மின்பகிர்மான கழகத்தின் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் தலைமையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரையில், எவ்வளவு கனமழை பெய்தாலும், மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.