கட்சி ஆண்டு விழாவில் பொதுமக்கள் முன்னிலையில் கண்கலங்கிய வடகொரிய அதிபர்

தொழிலாளர் கட்சி ஆண்டு விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் கண்கலங்கி மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக என்று விமர்சனம் எழுந்துள்ளது.

வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து வெளியான செய்தியில், வானத்தை விட உயரமாகவும், கடலை விட ஆழமாகவும் எங்கள் நாட்டு மக்கள் என் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் நான் அவர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டேன் . இதனால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது தாத்தா மற்றும் தந்தைக்குப் பிறகு நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு என் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. எனது முயற்சிகள் அனைத்தும் நேர்மையானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது என தனது தாத்தா மற்றும் தந்தையை மேற்கோள்காட்டி கிம் ஜாங் உன் பேசியதாக தெரிய வந்துள்ளது.

பேசும்போது கண்ணீருடன் பேசியதாகவும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் உட்பட மக்களும் கண்கலங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் பலர் கிம் இவ்வாறு பேசுவது மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு என்று விமர்சனம் எழுந்துள்ளது.