மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மழைநீர்வடிகால் தூர்வாரும் பணிகளுக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டும், 50 சதவீத பணிகள் கூட இன்னமும் முடிவடையவில்லை.

எனவே இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற பெரும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

பல்லாவரம், சேலையூர், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளில் உள்ள வடிகால்கள் அனைத்திலும், குப்பை, கழிவுப் பொருட்கள், மண் ஆகியவை தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்று, தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தூர்வாரும் பணிகள் இன்னும் முடியவில்லையோ அங்கெல்லாம் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுத்து, மக்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.