நான்கு சக்கர வாகனங்களின் பம்பர்களை அகற்றுவதில் அதிகாரிகள் தீவிரம்

நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களை அகற்றி அபராதம் வசூலிப்பதில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகவும், விபத்தில் சிக்கும்போது காருக்குச் சேதாரம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக 'கிராஷ் கார்டு' என்பதை பலரும் பொருத்தியுள்ளனர்.

கார்களில் பம்பர்களைப் பொருத்தக் கூடாது என 2017 ஆம் ஆண்டே மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தற்போது மீண்டும் எச்சரித்ததுடன், அடுத்தடுத்து சில வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பம்பர்களால் தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் தவிர விபத்துக்குள்ளாகும்போது காரின்'ஏர் பேக்' விரிவடைவதை பம்பர்கள் தடுத்து விடும் என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் பம்பரை பொருத்துவதாகவும், ஆகையால் அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றாதவர்கள் மீது தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் அடுத்தடுத்து தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து சட்டத்தின்படி சோதனையில் சிக்கும் வாகன உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனை, இல்லாவிடில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில், கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்த சோதனையில் 27 வாகனங்களுக்குத் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது, அத்துடன் கடந்த 10 நாட்களாக நடந்த வாகன சோதனையில் இதே காரணத்துக்காக 327 வாகன ஓட்டுநர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இந்த சோதனை தொடரும் என்றும் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.