கடந்த கால சம்பவங்கள்... கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஒமர் தகவல்

பிரான்ஸ்: பின்லேடனின் நான்காவது மகனான 41 வயதாகும் ஒமர், ஆங்கில ஊடகமொன்று அளித்த பேட்டியில் அவர் தனது தந்தையுடனான கடந்த கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். இதன்போது அவர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் சிறுவனாக இருந்த போதே, தனது தந்தை தன்னிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து சுடப் பயிற்சி அளித்ததாக அவர் தெரிவித்தார். பல்வேறு சம்பவங்களால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்த ஓமர், தனது தந்தையுடனான மோசமான நாட்களை மறக்க முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி தன்னிடம், தனது பணிகளைத் தொடரும் மகனாக அவர் என்னைத்தான் தேர்வு செய்திருப்பதாகக் கூறுவார் என்றும் , ஆனால், ஒருபோதும் அல் கெய்தாவில் இணையுமாறு என்னை வற்புறுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளார். .

அதேவேளை ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வரும் ஒமர், தனது பழைய மோசமான நினைவுகளிலிருந்து வெளியேற இது ஒரு சிகிச்சை போல இருப்பதாகவும், கூறுகிறார்.

தனது தந்தை ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தினர் கூறியபோதிலும், அதனை தான் நம்பவில்லை என்று கூறும் ஒமர், அவர்கள் அந்த உடலை அமெரிக்க மக்களுக்குக் காட்ட அதனை கொண்டு சென்றிருக்கலாம் என கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

ஒசாமா பின் லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு கடந்த 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் சௌதி அரேபியாவில் பிறந்த ஒமர், தற்போது, பிரான்ஸ் நாட்டின் நோர்மாண்டி நகரில் தனது மனைவி ஸைனாவுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது