இமாச்சலுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை

இமாச்சலப் பிரதேசம்: ஆரஞ்சு அலர்ட் என்றால் 24 மணி நேரத்துக்கு 115.6 மில்லி மீட்டரில் இருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு பெய்யும் என்பதைக் குறிப்பதாகும். இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்கின்றனர். ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டால் மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 2 இமயமலை மாநிலங்களிலும் கடந்த சில மாதங்களாகவே இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக மிகப் பெரிய அளவில் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் இதுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து வானிலை ஆய்வு மையத்தின் அண்மை அறிவிப்பின்படி இமாச்சலில் பருவமழையின் தீவிரம் சற்றே குறைந்துள்ளது. எனினும் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

,மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் எச்சரிக்கை: உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன், பாரி, நைனிடால், சம்பாவாட், பாகேஸ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.