செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவு

சென்னை: உச்சநீதிமன்றத்தை அணுகுங்கள்... செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு மேகலா மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட உத்தரவு வழங்கியதைத் தொடர்ந்து மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அவர் நீதிபதி பரத சக்கரவர்தியின் தீர்ப்பை உறுதி செய்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் காலத்தை எப்போதில் இருந்து கணக்கில் கொள்வது என்பது பற்றி இரு நீதிபதிகள் அமர்வே தீர்மானிக்கும் என்றும் கூறி இருந்தார்.

இதன்படி, இரு நீதிபதிகள் அமர்வு முன் மேகலா தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சட்டவிரோதம் அல்ல என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று நீதிபதி நிஷா பானு உறுதிபட தெரிவித்தார்.

கைது சட்டவிரோதம் என்பதில் தான் உறுதியாக உள்ள போது அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி நிஷா பானு, உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த விவகாரத்தில் தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தியும் நீதிபதி நிஷா பானு கூறியபடி உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, அமலாக்கத்துறை கஸ்டடியில் கேட்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உச்சநீதிமன்றத்தில் முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். செந்தில் பாலாஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார். அப்போது அமலாக்கத்துறை கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.