நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஊசுடு ஏரி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தூரத்தில் ஊசுடு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 900 ஏக்கர் தமிழகத்துக்கும், 150 ஏக்கர் புதுச்சேரிக்கும் சொந்தமானது. இங்கு சுத்துக்கேணி கால்வாய் மூலமாக செஞ்சியாற்றில் இருந்து பெருமளவில் தண்ணீர் வருகிறது. ஆண்டுதோறும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்து செல்கின்றன. எனவே இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஊடுசு ஏரி முழுவதுமாக நிரம்பாமல் இருந்து வந்தது.

கடந்த சில நாட்களாக நிவர், புரெவி புயலால் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த ஊசுடு ஏரி தற்போது நிரம்பியுள்ளது. புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் ஊசுடு ஏரியின் உயரம் 11.51 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 10.5 அடியாக உள்ளது. ஏரி நிரப்பியதால் கடல் போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு ஊசுடு ஏரியின் அழகை கண்டு களித்தனர். சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கொரோனா காரணமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊசுடு ஏரி தற்போது நிரம்பி இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் மீண்டும் படகு சவாரி நேற்று தொடங்கியது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் படகு சவாரிக்கு பொதுமக்களை அனுமதித்து வருகிறார்கள்.

நேற்று காலை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் ஊசுடு ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். நீர்வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீரை வெளியேற்றினால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நாராயணசாமி கேட்டுக் கொண்டார். அதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.