திருச்சி மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை... வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக பகலில் கடுமையாக வெயில் அடித்து வருகிறது இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து. இரவு 7.15 மணி முதல் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டிருந்தது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் சாலையோரங்களில் இரவு வேளையில் தள்ளுவண்டி மூலம் டிபன் கடை நடத்தியவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். இதுபோல திருச்சி மாநகரில் கிராப்பட்டி- எடமலைப்பட்டி புதூர் இணைக்கும் ரெயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நின்றது.

மணப்பாறை பஸ் நிலையம் முன்பு நேற்று பெய்த மழை நீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது. இதுமட்டுமின்றி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை டிரைவர்கள் வேறு இடத்திற்கு எடுத்து சென்றனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:- வாத்தலை அணைக்கட்டு 136.80(மிமீ), சமயபுரம் 78(மிமீ), முசிறி 60(மிமீ), நவலூர் குட்டப்பட்டு 33.80(மி.மீ.), பொன்னணியாறு அணை 11.20(மி.மீ.), துறையூர் 16(மி.மீ.), திருச்சி டவுன் 9.90(மிமீ), திருச்சி ஜங்ஷன் 8(மி.மீ.), பொன்மலை 5.80(மிமீ), புலிவலம் 5(மி.மீ.), சிறுகுடி 3(மி.மீ.), மொத்தம். 403.90(மி.மீ.), சராசரி 16.16(மி.மீ.).