தண்ணீரின்றி திருவாரூர் மாவட்டத்தில் கருகும் நெற்பயிர்: விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை நீர் கடைமடை வரை வராததாலும், வெட்டாறு பாசன வாய்க்காலில் குறைவான அளவு தண்ணீரே திறக்கப்பட்டதாலும் நெற் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், 2021 ஆம் ஆண்டு முதல் குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீடு நிறுத்தப்பட்டதால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.