ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப் சாச்சா

பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப் சாச்சா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவருக்கு ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நாளை ராமஜென்ம பூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் மொத்தமே 175 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், 135 பேர் சாதுக்கள் . இஸ்லாமிய மத்தை சேர்ந்த 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமஜென்ம பூமி இருந்த இடத்துக்கு உரிமை கொண்டாடி முதன்முதலில் வழக்கு தொடர்ந்த ஹாசிம் அன்ஸாரி 2016- ம் ஆண்டு இறந்து போனார். பிறகு, அவரின் மகன் இக்பால் அன்ஸாரி இந்த வழக்கை நடத்தி வந்தார். எனவே, இக்பால் அன்ஸாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது., அவரும் விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷியா வக்புபோர்டு தலைவர் சயீத் வாஷிம் ரிஸ்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல, உத்தரபிரதேச மாநில சன்னி வக்புபோர்டு தலைவர் சூபைர் அகமது ஃபாருக்கிக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, மற்றொரு இஸ்லாமிய பெரியவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவருக்கும் பாபர் மசூதி தொடர்பான விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஷெரீப் சாச்சா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர் , பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஃபைசாபாத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வந்த ஷெரீப் 3,000 இந்துக்கள், 1,500 ஆதரவற்றோரின் உடல்களை அவரவர் மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்துள்ளார். கடந்த 27 வருடங்களாக இந்த காரியத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

மக்களுக்கு சேவை செய்தவர் என்ற அடிப்படையில் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 80 வயதான ஷெரீப் சாச்சாவால் ராமர் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் சொல்கின்றனர். 'இந்துவாவது முஸ்லிமாவது எல்லோவற்றையும் தாண்டி மனிதநேயமே முக்கியம் 'என்று சொல்வது செரீப் சாச்சாவின் வழக்கம்.