பெற்றோர்கள் அனுமதி முக்கியம்; பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்

பெற்றோர் அனுமதி முக்கியம்... கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜுலை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளி செல்லலாம் என அறிவித்திருந்தது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் துவங்குகின்றன. இதற்காக பெற்றோரிடம் ஒப்புதல் பெறவேண்டும், முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தனிநபர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் எனவும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் பெற்றோர் அனுமதி அளித்தால் மட்டுமே பள்ளிக்கு வரலாம், இல்லையெனில் கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.