சென்னையில் இருந்து செல்லும் பயணிகள் விமானங்கள் ரத்து

சென்னை: விமானங்கள் ரத்து ... வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.