தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழும் மக்கள்

திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுவதாக புராண வரலாறு. அதேபோல் கொரோனா என்ற கொடிய அரக்கன் பிடியிலிருந்தும் உலக மக்கள் விடுபட வேண்டும்.

தீபாவளி நாளில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் மேற்கொண்டு, புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வது வழக்கம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளித் திருநாளை பொதுமக்கள் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

வீடுகள்தோறும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி இறைவனையும், மூத்தவர்களையும் வணங்கினர். பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர்களும், பெரியவர்களும் அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முகக்கசவசம் அணிந்தவாறே பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்தனர்.

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரிலும், தொலைபேசியிலும், இணையதள வாயிலாகவும் தீபாவளி வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தலைதீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.