ரஷிய ஆயுதக்கிடங்கில் தீ விபத்து காரணமாக 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றம்

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கில் ரியாசான் என்ற இடத்துக்கு அருகே ராணுவ தளத்தில் ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்தது. இந்த ஆயுத கிடங்கில் ஏவுகணைகளும், பிற பீரங்கி ஆயுதங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆயுதக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென பரவியதால் அந்தப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. பின்னர் உடனடியாக அந்த பகுதியில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த ஆயுதக்கிடங்கில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

14 கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் இந்த தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

70 தீயணைப்பு படை வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பிராந்திய கவர்னர் நிகோலே லுபிமோவ் கூறுகையில், மிக மோசமான தருணம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.