இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம்

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா வைரசை முறையாகக் கையாளவில்லை. திறனற்ற அவரது நிர்வாகத்தால் நாடு பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாக கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது. தற்போது, இஸ்ரேலில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீச தொடங்கி இருப்பதாக கூறி 2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை கடந்த மாதம் 18-ந் தேதி பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அமல்படுத்தினார். இது இந்த முழு ஊரடங்கு அக்டோபர் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த முழு ஊரடங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி என மக்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை பிரதமர் பெஞ்சமின் நிராகரித்துள்ளார். அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம் நடத்தினர். தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர்.

டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. இருதரப்பு மோதலில் போலீசார் பலரும் ஏராளமான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இந்தப் போராட்டம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும், பலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.