துபாய் வணிக வளாகங்களில் முன்பதிவு இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதி

துபாய் நகரில் உள்ள மால் ஆப் தி எமிரேட்ஸ், மிர்திப் சிட்டி சென்டர் மற்றும் தேரா சிட்டி சென்டர் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை மையங்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தின் 7 நாட்களும் செயல்படும். இந்த மையத்தில் பரிசோதனை செய்ய முன்பதிவு கட்டாயம் என கூறப்பட்டது.

தற்போது இந்த மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. நேரடியாக அந்த மையத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இந்த மையங்கள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா பரிசோதனையானது குடியிருப்புவாசிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயணம் செய்வதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பிற மருத்துவ பரிசோதனைகளுக்காக வருபவர்கள் இந்த மையத்தை பயன்படுத்தக்கூடாது. பயணம் செய்ய விரும்புபவர்கள் விரைவாக தங்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள உதவும் வகையில் கடந்த மாதம் வணிக வளாகங்களில் இந்த பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வணிக வளாகத்தின் நுழைவு பகுதியிலும் பொதுமக்கள் எளிதில் செல்ல உதவும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 180 பரிசோதனைகள் செய்யும் வகையில் இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கான கட்டணம் 150 திர்ஹாம் ஆகும். பரிசோதனை செய்த 24 மணி நேரத்துக்குள் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் இந்த மையத்தில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.