கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களை இறுதிச்சடங்குக்கு ஒப்படைக்கும் பிளஸ் 2 மாணவர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், வட கிழக்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள சீலாம்பூரை சேர்ந்த சந்த் முகமது என்ற பிளஸ் 2 மாணவர் தினமும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி வார்டில் இருந்து அகற்றுவதும், பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி மின்தகன மையத்துக்கோ அல்லது இடுகாட்டுக்கோ கொண்டு சென்று இறுதிச்சடங்குக்கு ஒப்படைப்பதுமான ஆபத்தான பணியை மேற்கொண்டு வருகிறார்.

இவரது தாய்க்கு தைராய்டு நோய். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு எதிர்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டும் என்பது தான் ஆசை. கொரோனா வைரஸ் காரணமாக சந்த் முகமதுவின் குடும்பத்தின் தேவைகளை ஓரளவு கவனித்து வந்த அவரது மூத்த சகோதரருக்கு, வேலை இல்லாமல் போய்விட்டது. இதனால் சந்த் முகமது வேறுவேலைக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை என்று வேலை தேடினர்.

டெல்லி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளி வேலைக்கு வேலைக்கு சேர்ந்தார். கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இந்த வேலையை, குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் சகோதரிகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தவில்லை,பணத்துக்காக தவிக்கிறோம். எங்களுக்கு சாப்பாடு வேண்டும். என் அம்மாவுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கித்தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், உலகத்தில் இந்த நாளில் மிகவும் ஆபத்தான வேலை இப்போது நான் செய்யும் வேலைதான். இந்த வேலைக்கு எனக்கு மாத சம்பளம் ரூ.17 ஆயிரம். என் பெற்றோர் என் வேலையைப் பற்றி தினமும் கேட்பார்கள். அவர்கள் என் பாதுகாப்புக்காக தொழுகை நடத்துகிறார்கள். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொள்கிறேன். எல்லா பாதுகாப்பையும் பின்பற்றத்தான் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.