ஆகஸ்டு 2ம் முதல் 15ம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் மூவர்ண கொடியை காட்சிப்படமாக வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியா: நாட்டின் 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15ஆம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை வீடுகள்தோறும் ஏற்றுவது மக்கள் இயக்கமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் மூவர்ண கொடியை காட்சிப்படமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார். அதை தொடர்ந்து இந்திய மூவர்ண கொடி குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நமது மூவர்ண தேசிய கொடியை கொண்டாடும் இயக்கத்துக்கு நம் தேசம் தயாராகி வருகிறது. மேலும் மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது முயற்சிகளுக்கு நமது தேசம் என்றென்றும் கடமை பட்டிருக்கும். இந்த மூவர்ண கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு தேச முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என பதிவிட்டுள்ளார்.