புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை... 'ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இன்று இரவு, 10:00 மணிக்கு மேல், அதிகாலை வரை, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு, பொதுமக்கள் வரக்கூடாது' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில், ஒவ்வொரு ஆண்டும், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு, கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில், புத்தாண்டு கொண்டாட அரசு தடை விதித்துள்ளது.

வீடுகளில், குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். ஆனால், தடையை மீறி, இன்று இரவு, 10 மணிக்கு மேல், அதிகாலை வரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு, பொதுமக்கள் வரக்கூடாது. மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவொற்றியூரில் இருந்து, ஈ.சி.ஆர்., சாலை வரை, 'எஸ்' வடிவிலான தற்காலிக தடுப்புகள் அமைத்துள்ளனர். அத்துடன், அண்ணா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, அடையாறு சர்தார் வல்ல பாய் படேல் சாலை என, முக்கிய சாலைகளை போலீசார் மூட உள்ளனர்.

ஒளிரும் விளக்கு உதவியுடன், 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடஉள்ளனர். புத்தாண்டையொட்டி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில், நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இந்த இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தாண்டு அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, சென்னை முழுதும், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் என, பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.