கடற்கரையில் ஆபத்தான இடத்தில் குறும்படம் எடுத்தவர்களை எச்சரித்து அனுப்பி போலீசார்

போலீசார் எச்சரிக்கை... காசிமேடு கடற்கரையில், ஆபத்தான இடங்களில், குறும்படம் எடுத்த, ஒரு பெண் உட்பட, 15 பேரை போலீசார், எச்சரித்து அனுப்பினர்.

சென்னை, காசிமேடு, செரியன் நகர் கடற்கரையில், கடந்த வாரம், பழையவண்ணாரப்பேட்டை, கப்பல் போலு தெருவைச் சேர்ந்த, அருள்ராஜ், துர்கா, மார்டின், மார்க்ரெட், விஷ்ணு ஆகியோர், கடல் அலையில் சிக்கி பலியாகினர்.

ஒரே நேரத்தில், ஐந்து சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின், அங்கு குளிக்க தடை விதித்த போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார், கடற்கரையில் ரோந்து சென்றபோது, காசிமேடு வார்ப்பு ஒட்டிய, ஆபத்தான பகுதிகளில் சிலர் கேமராவை வைத்து, குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து விசாரித்தபோது, வளசரவாக்கம், கோடம்பாக்கம், வட பழநி பகுதிகளைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, 15 பேர் என்பதும் குறும்படம் தயாரிப்பு ஆர்வத்தில் கடற்கரையில் ஆபத்தான பகுதிகளில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து, கேமரா மற்றும் மொபைலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால், காசிமேடு கடற்கரையில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் கடலில் யாரும் குளிக்காதபடி, ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.