மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் விடுத்த எச்சரிக்கை

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

இந்நிலையில் மது போதையில் வாகனம் ஓட்டி காவல்துறையினரிடம் சிக்குபவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான அபராத ரசிதை மட்டும் பெற்றுச்செண்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.


அதனால் மது போதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.