ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் ஈடுபட்டுள்ளார் - கெய்லீ மெக்னானி

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், இன்னமும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் அவருக்கு பின்னடைவையே தந்தன.

இந்நிலையில், கடந்த 14-ந் தேதி தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடி ஜோ பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இது அவர் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி நேற்று முன்தினம் பேட்டி அளித்தபோது, அவரிடம் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்வாரா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை ஜனாதிபதி டிரம்ப் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் ஜனாதிபதி இன்னமும் ஈடுபட்டுள்ளார். தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பு என்பது அரசியல் அமைப்பு செயல்பாட்டின் ஒரு படியாகும். எனவே நான் அதை அவரிடம் விட்டுவிடுகிறேன் என்று கூறினார்.