கோயில்களை திறக்கலாம்... ஊழியர்கள் பணிக்கு வரலாம்; சுவாமி தரிசனம் செய்ய தடை

கோயில்கள் திறக்கலாம்... ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கிய அம்சமாக தமிழகம் முழுவதும் உள்ள பிரபல கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு மார்ச் 16ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயில்களில் தினமும் நடக்கும் பூஜைகள் தடை செய்யப்படவில்லை. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த முறை பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள அலுவலகங்களும் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்பு போலவே பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோயில்களிலும் வெளித்துறை பணியாளர்கள் 33 சதவீத் பேர் சுழற்சி முறையில் பணியாற்றலாம். உள்துறை பணியாளர்களும் தேவைக்கேற்ப பணிபுரியலாம்.

இதில் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர பிற நபர்களை அனுமதிக்கக்கூடாது. அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி இருப்பதை கோயில் நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும். கோயில் வளாகத்தை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.