குஜராத் பெட்ரோலிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் மோனோகிரிஸ்டலின் சூரிய புகைப்பட வோல்டாயிக் பேனலின் 45 மெகாவாட் உற்பத்தி ஆலை மற்றும் நீர் தொழில்நுட்ப மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, உலகின் எரிசக்தி துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் தொழில்துறையில் நுழைகிறீர்கள். இந்த நேரத்தில், தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.

மேலும் அவர், கார்பன் வெளியேற்றத்தை 30-35% குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த 10 ஆண்டு காலத்தில், எரிசக்தி தேவைகளுக்கு இயற்கை எரிவாயு பயன்பாட்டை 4 மடங்கு அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தார்.

பொறுப்புணர்வு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாய்ப்புகளுக்கான உணர்வைத் தருகிறது எனவும் எப்போதும் சுமையான உணர்வுடன் வாழும் மக்கள் தோல்வியடைகிறார்கள் எனவும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு உரையாற்றினார்.