பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடில்லி: பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்... பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக அவருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினாா்.

அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா். பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் இந்த வார தொடக்கத்தில் பதவியேற்றாா். அதன் பிறகு முதல்முறையாக அவருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினாா். இந்த உரையாடலின்போது, பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டதற்காக லிஸ் டிரஸ்ஸுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியா்களின் சாா்பில் பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்ததாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியா-பிரிட்டன் இடையிலான வியூக ரிதியிலான கூட்டுறவை விரிவுபடுத்த இரு தலைவா்களும் உறுதியேற்றுள்ளனா்; 2030 செயல்திட்ட அமலாக்கம், தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

பிரிட்டனின் வா்த்தக அமைச்சா், வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தபோது, இருதரப்பு நல்லுறவு மேம்பட லிஸ் டிரஸ் ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். விரைவில் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.