சாலையோர உணவு வியாபாரிகளுக்கும் ஆன்லைன் உணவு வினியோகத்தை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் காரணமாக வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், தெரு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு பி.எம்.ஸ்வாநிதி என்ற பெயரில் கடன்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. உத்தரவாதம் இன்றி குறைந்த வட்டிக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தெரு வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

டெல்லியில் இருந்தவாறு நேற்று காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியபோது, இந்தூர் மாவட்டம், சன்வர் நகரை சேர்ந்த தெரு வியாபாரி சாகன் லால், துடைப்பம் தயாரிப்பதற்கான செலவை குறைப்பதற்கு விளக்குமாறு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் குழாயை (அதாவது கைப்பிடி) திருப்பித்தருமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கலாம். இதன்மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

அதன்பின், காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பேசியபோது, பி.எம்.ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன்பெற்று முன்னேறி வருபவர்களை நான் வாழ்த்துகிறேன். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகளுக்கு இந்த திட்டத்தின் பலன்களை வழங்குவதும், அத்தகைய 4½ லட்சம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்குவதும் ஒரு பெரிய வி‌‌ஷயம். இரண்டே மாதங்களில் மத்திய பிரதேச மாநில அரசு இதை சாதித்து இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற மாநிலங்கள், மத்திய பிரதேச மாநிலம் மூலம் உத்வேகம் பெற வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், தெருக்களில் உணவுகளை விற்பனை செய்கிறவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை தளத்தை வழங்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய ஓட்டல்கள் போல, தெரு உணவு வியாபாரிகளும் ஆன்லைன் வழியாக உணவுகளை வினியோகம் செய்ய முடியும். இந்த வசதியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தெரு வியாபாரிகள் முன்வந்தால், அரசு இந்த முயற்சியை மேலும் தீவிரமாக்கும். பெரிய அளவில் தெரு வியாபாரிகள், ஆன்லைன் கட்டண முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.