அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்திருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா மாறியுள்ளதாகவும், விண்வெளி, கடல், அறிவியல், வர்த்தகம், விவசாயம், நிதி, கலை, செயற்கை நுண்ணறிவு என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி எனத் தெரிவித்த பிரதமர், அதனை ஊக்குவிக்கும் சக்திகைளை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாகவும், விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் சாதி, மதப் பாகுபாடு இல்லை என்றும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை தமது அரசு பாதுகாப்பதாகவும் பிரதமர் கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சு 79 முறை கைத்தட்டல்களை பெற்றது. பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர்.

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு அளிக்கப்பட்ட அரசு விருந்து நிகழ்ச்சியில், இரு நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.