சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: பட்டேல் சிலைக்கு பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர் மரியாதை

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படுகிறார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக பதவிவகித்தார். இவரது பிறந்த நாளையொட்டி சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்திவருகின்றனர்.

பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்று, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பிரதமர் பார்வையிட்டார்.

இதை போல், டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.