தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது .. பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கொரோனா பாதிப்புகள் சற்று குறைய ஆரம்பித்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது விடுமுறை காலத்தை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும் மேல்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு கற்றல் இடைவெளி சரி செய்யப்பட்டது.

இதை அடுத்து நடப்பு கல்வியாண்டில் தாமதமின்றி சரியான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சனி, ஞாயிறன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தபடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த தொடர் வகுப்புகளால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குனர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.